செங்கல்பட்டு அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த இளைஞரை வழிமறித்து, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (26), அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார். இவர் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்ததாக கூறப்படுகிறது. கையில் வைத்திருந்த ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வீரமுத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இதற்கிடையே, சிங்கபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அந்த முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.