புல்வெளியாக மாறிய திருப்பரங்குன்றம் கோவில் தீர்த்த குளம்: பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

புல்வெளியாக மாறிய திருப்பரங்குன்றம் கோவில் தீர்த்த குளம்: பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை

புல்வெளியாக மாறிய திருப்பரங்குன்றம் கோவில் தீர்த்த குளம்: பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் லட்சுமி தீர்த்த குளம் அமைந்துள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்த குளம் 66 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது. புராண காலத்தில் தெய்வானை அம்பாளுக்காக இந்த தீர்த்த குளம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் வற்றாத புனித தீர்த்தமாக விளங்கிய இந்த குளத்துக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சென்று, தண்ணீரை கைகளால் எடுத்து தலையில் தெளித்த பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்தது. குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கி போட்டு பக்தர்கள் மகிழ்ந்தும் வந்தனர். மேலும், தோல் பிரச்சினைகள் உள்ளவர்கள் குளத்தில் உப்பு மற்றும் மிளகு போட்டு வழிபட்டால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே இருந்து வருகிறது. இதனால் லட்சுமி தீர்த்த குளத்தை பக்தர்கள் புனிதமாக கருதி வந்தனர். இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் சுற்றுச்சுவர் அடுத்தடுத்து 3 முறைக்கும் மேல் இடிந்து விழுந்தது. அதேபோல் குளத்தில் இருந்த தண்ணீரும் வற்றியது. இதையடுத்து தீர்த்த குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில், அதன் பழமையான தன்மை மாறாமல் குளம் சீரமைக்கப்பட்டது. பின்னர் புதுப்பிக்கப்பட்ட தெப்பக்குளத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சீரமைப்புக்குப் பிறகு குளத்தில் தெளிவான நீர் நிரப்பப்பட்டு, மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுவதுடன் முறையாக பராமரிக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது குளத்தின் நிலை அதற்கு மாறாக உள்ளது. குளத்தின் உள்பகுதி முழுவதும் அதிகளவில் புற்கள் வளர்ந்து, பச்சை பசேல் என புதர்மண்டி காணப்படுகிறது. குளத்தை தொடர்ந்து பராமரிக்காத நிலையே நீடிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, லட்சுமி தீர்த்த குளத்தை மீண்டும் சீரமைத்து, தொடர்ந்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தின் தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.