மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கானோர் வனத்துறை நுழைவுவாயில் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்களின் உடமைகள் வனத்துறையினரால் சோதனை செய்யப்பட்டன. அதன்பிறகே அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.