புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் (59) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னாங்குடியைச் சேர்ந்த நாகராஜ், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை இன்று காலை பள்ளியில் இறக்கிவிட்டு, பாக்குடி வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பாக்குடி–பெரிய குடும்பம்பட்டி சாலையில் அவரை வழிமறித்த மர்ம நபர்கள், நாகராஜை தலை துண்டித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.பாக்குடி கவரச்சி குளக்கரை தார் சாலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த நாகராஜின் உடலை போலீசார் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகராஜுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே வழக்கு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் நாகராஜ் மீது இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால், இடப்பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட நாகராஜ், ஏற்கனவே கோங்குடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.