புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று (வியாழக்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பெருஞ்சுனை பகுதியில் விராலிமலை சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் முயன்றுள்ளார். இதில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்ததில் அதற்குள் இருந்த பயணிகள் சிலர் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து உதவினர். பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 22 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.