புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா

புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிட வேண்டும் - ஜவாஹிருல்லா

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான இடம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள இந்த புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்கு தொடர்புடைய நிலங்கள் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, கட்டுமானப் பணிகளுக்கான திட்டமிடல், சுற்றுச்சூழல் தொடர்பான அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்கான இடம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் புதிய நிர்வாக வளாகம் அமைய உள்ளதால், இடத் தேர்வு குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இது கருதப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறுகையில், "பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பகுதி முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லத்துக்கு அருகில் இருக்கலாம். ஆனால், அங்கு வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும். தற்போது ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் செயல்பட்டு வருகின்றன. அங்கு போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்குக் குறைவாக உள்ளது. ஆனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே, இந்தத் திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட வேண்டும்" என்றார்.