பீகாரில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகளை கீழே தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, ரெயில்களில் பயணிக்கும் இளம் தொழிலாளர்களை குறிவைத்து அவர் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பரிஸ்வான் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் திவாரி (25) என்பவரே கைது செய்யப்பட்டவர். இவர் ரெயில்களின் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் பயணிக்கும் எளிய இளம் தொழிலாளர்களை குறிவைத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 19-ந்தேதி ஹைதராபாத்தில் இருந்து பீகாரின் வைஷாலிக்கு 21 வயதான நிதின் குமார் என்ற இளைஞர் ரெயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரை ரோஹித் திவாரி பிடித்து வைத்ததுடன், அவரது குடும்பத்தினரிடம் ரூ.10,000 கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கிடைக்காததால் நிதினின் கை, கால்களை கயிற்றால் கட்டி, ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தள்ளியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த 6-ந்தேதி கைலாஷ் குமார் என்ற பயணியும் இதே முறையில் ரெயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடன் பயணம் செய்த ரித்தேஷ் குமார் என்பவரையும் வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. எனினும், ரித்தேஷ் காயங்களுடன் உயிர் தப்பி, போலீசாரிடம் தாக்குதல் நடத்திய நபரின் அடையாளங்களை தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீசார் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் செல்போன் இருப்பிடத் தகவல்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து வாரணாசி அருகே உள்ள மோகன்சராய் பகுதியில் கடந்த 22-ந்தேதி ரோஹித் திவாரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ரோஹித் திவாரி ஏற்கனவே பீகார் ரெயில்வே தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு 25 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்புதான் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பிறகு குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ரோஹித்திடம் இருந்து உயிரிழந்த கைலாஷ் குமாரின் அடையாள அட்டைகள் மற்றும் பர்ஸ் ஆகியவற்றையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரெயிலில் அடுத்தடுத்து பயணிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.