பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு விநாயகர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூஷிகம், சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதனுடன் கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் திருக்குளம் அருகே அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தேரில் சுவாமிகள் எழுந்தருளியதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து பெரிய தேரை உற்சாகமாக இழுத்துச் சென்றனர். இதன் பின்னால் வந்த சண்டிகேசுவரர் சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற தேர்கள் பின்னர் நிலையை வந்தடைந்தன. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டத்திற்கு முன்பாக, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மூலவர் கற்பக விநாயகரின் சந்தனகாப்பு அலங்கார நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை 4.30 மணி முதல் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 10 மணி வரை இந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு கற்பக விநாயகர் காட்சியளித்தார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி தினமான இன்று (திங்கட்கிழமை) அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் கற்பக விநாயகர் தங்க அங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருள, அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மதிய உச்சிகால பூஜையின்போது மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படைக்கப்பட்டது. இரவு நடைபெறும் பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைகிறது.