திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 9 நாள் பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.21 மணி முதல் 6.35 மணி வரை மீன லக்னத்தில் கருட கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று, மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். மேலும், பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளின் ஒரு பகுதியாக அதிநவீன ஆன்மிக அனுபவ மையம், எஸ்.வி. அருங்காட்சியகம், மின்சார பேருந்துகள், நந்தகம் செயலி மற்றும் குழு காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை முதல்-மந்திரி நாளை தொடங்கி வைக்க உள்ளார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நிலையில், கோவிலின் உட்பகுதி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்கவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. விழாவின் தொடக்க நிகழ்வான அங்குரார்ப்பணம் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீவாரியின் சேனாதிபதியாக கருதப்படும் விஷ்வக்சேனர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து, பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிட்டார். அங்குரார்ப்பணத்தின் ஒரு பகுதியாக கோவில் யாகசாலையில் பூமாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் புற்று மண் சேகரிக்கப்பட்டு, அதில் நவதானியங்கள் விதைக்கப்பட்டன. இந்த நிகழ்வு வைகானச ஆகம விதிமுறைகளின்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.