பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 25 ஆண்டுகளில் முதலமைச்சராகவும், பிரதமராகவும் மோடி பணியாற்றிய காலகட்டத்தில் நிர்வாகத் துறையில் பல புதிய சாதனைகளை உருவாக்கியதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவர் ஊக்கமளித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொது சேவை மற்றும் தேசக் கட்டமைப்புப் பணிகளை அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுவதாகவும் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.