டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி சார்பில் நடைபெற்ற இரவு விருந்தில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வெடுப்பதற்காக ஓட்டலுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் நேற்று டெல்லி வந்தார். மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதமர் மோடியும் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் நலன்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் உறவுகள் தொடர்ந்து வளர்வதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜின்பிங், இரு நாடுகளின் தேசிய சூழல்கள் வெவ்வேறாக இருந்தாலும், பொதுவான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியும் என்றும், ஒருவருக்கொருவர் முழுமையான ஆதரவுடன் செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், சிக்கலான சர்வதேச சூழல் நிலவி வரும் நிலையில், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளாகவும், உலகளாவிய தெற்கின் முக்கிய நாடுகளாகவும் விளங்கும் சீனாவும் இந்தியாவும் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை ஏற்றுள்ளன என்றும் ஜின்பிங் கூறினார். இதனிடையே, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த விருந்தில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவர் இரவு விருந்தை தவிர்த்துவிட்டு ஓட்டலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏன் விருந்தில் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஓய்வெடுப்பதற்காக அவர் ஓட்டலுக்கு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோல், அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதுவும் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் தனது நாட்டுக்கு திரும்பினார். அவரும் பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரத்தில், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பிற தலைவர்கள் பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.