பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 5ஜி சேவையை விரைவாக தொடங்குவதற்கான உறுதியான காலக்கெடுவை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை திட்டமிட்டு பின்னுக்குத் தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 5ஜி இணைய வசதி அடித்தட்டு மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய முக்கிய தேவையாக உள்ளது. மாணவர்களின் உயர்கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கிராமப்புறங்களில் நடைபெறும் சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகளின் அன்றாட அரசு சேவைகள் என பல்வேறு தேவைகளுக்கு அதிவேக இணையம் அவசியமாகியுள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 5ஜி சேவையை தொடர்ந்து தாமதப்படுத்துவது எவ்வாறு நியாயமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதிக்கும் நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தேவையான நவீன உபகரணங்கள், நிதி மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய நேரத்தில் வழங்காமல் தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்துவதாக மத்திய அரசு கூறி வந்தாலும், சந்தைப் போட்டியில் இருந்து அந்த நிறுவனத்தை விலக்க முயற்சிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துரோகச் செயலாகும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தனியார் பெருநிறுவனங்களின் லாபத்துக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் டிஜிட்டல் பாதிப்புக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தாமதமாவதற்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதுடன், நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் தரமான அதிவேக 5ஜி சேவையை தொடங்குவதற்கான தெளிவான காலக்கெடுவை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.