பி.எப். பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்வு... தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

பி.எப். பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்வு... தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

பி.எப். பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்வு... தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) திட்டத்தில் கட்டாயமாக சேருவதற்கான அடிப்படை ஊதிய வரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் பெறும் மேலும் பல தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வர உள்ளனர். தொழிலாளர்களுக்கான முக்கிய சமூகப் பாதுகாப்பு அமைப்பாக இ.பி.எப்.ஓ. செயல்பட்டு வருகிறது. மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள தொழிலாளர்களை இத்திட்டத்தில் சேர்ப்பது கட்டாயமாக இருந்தது. அதேபோல், 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களும் இ.பி.எப்.ஓ.வில் பதிவு செய்வது அவசியமாகும். இதுவரை, புதிதாக பணியில் சேரும் ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்குள் இருந்தால் மட்டுமே கட்டாய இ.பி.எப். சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெறும் புதிய ஊழியர்களை நிறுவனங்கள் கட்டாயமாக பி.எப். திட்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. ஒருவர் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ரூ.15 ஆயிரம் வரம்பை அடிப்படையாகக் கொண்டு ஊழியர் மற்றும் நிறுவனம் தலா ரூ.1,800 பங்களிப்பு செலுத்தும் நடைமுறை இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்ட பிறகு, பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் குறைந்தபட்ச ஊதியம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும், 8-வது ஊதியக்குழுவும் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஊதியங்கள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த சூழலை கருத்தில் கொண்டு, இ.பி.எப்.ஓ. அமைப்பின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, பி.எப். பிடித்தத்துக்கான ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனைகள் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில், பி.எப். பிடித்தத்துக்கான அடிப்படை ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த முடிவின் மூலம் 51 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கூடுதலாக இ.பி.எப்.ஓ. உறுப்பினர்களாக சேர வாய்ப்பு உள்ளது. தற்போது சுமார் 8 கோடி தொழிலாளர்கள் இ.பி.எப்.ஓ.வில் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், 82 லட்சம் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஊதிய வரம்பு உயர்த்தப்படுவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் ரூ.10,250 கோடி பட்ஜெட் நிதி ஆதரவுடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.56,696 கோடி செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள் கூடுதல் ஊழியர்களுக்கு கட்டாய பி.எப்.: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறும் புதிய ஊழியர்களும் இனி கட்டாய இ.பி.எப். வரம்புக்குள் வர உள்ளனர். இதனால், சமூகப் பாதுகாப்பு பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நீண்டகால சேமிப்பு வாய்ப்பு: பணிக்காலத்தில் தொடர்ந்து பி.எப். பங்களிப்பு செய்வதன் மூலம் தொழிலாளர்களுக்கு நீண்டகால சேமிப்பு உருவாகும். ஓய்வுக்காலத்திலும் அல்லது விதிகளின்படி தேவையான நேரத்தில் பணத்தை திரும்பப் பெறும்போதும் இது நிதி ஆதரவாக அமையும். ஓய்வூதியப் பாதுகாப்பு: தகுதி பெறும் ஊழியர்கள், ஊழியர் ஓய்வூதியத் திட்டமான இ.பி.எஸ். மூலம் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும். இது சம்பந்தப்பட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். முன்பு பழைய ஊதிய வரம்பை தாண்டியதால் கட்டாய இ.பி.எப். வரம்பில் இடம்பெறாத சில தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியப் பலன்களுக்கான வாய்ப்பு விரிவடையலாம். காப்பீட்டு பாதுகாப்பு: அதிகமான தொழிலாளர்கள் முறைசார்ந்த இ.பி.எப்.ஓ. அமைப்புக்குள் வருவதால், விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு வைப்பு நிதி சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீட்டு பாதுகாப்பும் கிடைக்கும். மொத்தத்தில், பி.எப். பிடித்தத்துக்கான ஊதிய வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தியிருப்பது கூடுதல் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை முறைசார்ந்த சமூகப் பாதுகாப்பு அமைப்புக்குள் கொண்டு வருவதற்கான மாற்றமாக அமைந்துள்ளது. இது பி.எப். சேமிப்பை மட்டுமல்லாமல், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும் வகையில் உள்ளது.