பார்சல் கொடுக்க வந்த இடத்தில் உதவி: சமையலறை தீயை அணைத்த டெலிவரி ஏஜென்டுக்கு பாராட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பார்சல் கொடுக்க வந்த இடத்தில் உதவி: சமையலறை தீயை அணைத்த டெலிவரி ஏஜென்டுக்கு பாராட்டு

பார்சல் கொடுக்க வந்த இடத்தில் உதவி: சமையலறை தீயை அணைத்த டெலிவரி ஏஜென்டுக்கு பாராட்டு

பஞ்சாப் மாநிலம் மொகாலியில், வாடிக்கையாளருக்கு பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஏஜென்ட் ஒருவர், வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தைத் துரிதமாகச் செயல்பட்டு தடுத்துள்ளார். அவரது துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மொகாலியைச் சேர்ந்த மருத்துவர் ஷிவாங்கி ஜோஷி, கடந்த சனிக்கிழமை ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலைப் பெறுவதற்காக வீட்டின் வாசலுக்கு வந்தார். அப்போது, சமையலறையில் அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் எண்ணெய் அதிகமாகச் சூடாகி, திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீப்பிழம்புகளும் புகையும் எழுந்ததால் அதிர்ச்சியடைந்த ஷிவாங்கி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். அந்தச் சூழலை உடனடியாகப் புரிந்துகொண்ட டெலிவரி ஏஜென்ட், தாமதிக்காமல் வீட்டிற்குள் சென்று சமையலறையில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார். அங்கிருந்த துணியை எடுத்து எரிந்துகொண்டிருந்த பாத்திரத்தின் மீது கவனமாகப் போர்த்தி, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். டெலிவரி ஏஜென்ட் தீயை அணைத்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. இந்த வீடியோவை மருத்துவர் ஷிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததுடன், இக்கட்டான நேரத்தில் உதவிய நபருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ஆபத்தான சூழலில் உடனடியாகச் செயல்பட்டு பெரும் விபத்தைத் தடுத்த டெலிவரி ஏஜென்டின் துணிச்சலையும் மனிதநேயத்தையும் பாராட்டி வருகின்றனர்.