இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், ‘அட்டகத்தி’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது பா.ரஞ்சித் எழுதி இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் சோபிதா துலிபாலா டூப் இல்லாமல் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். ஏற்கனவே, ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ (Word of Vettuvam) என்ற பெயரில் படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.