கனடா சூப்பர் 60 கிரிக்கெட் தொடரில், பேட்ஸ்மேனைத் தாண்டிச் சென்ற பவுன்சர் பந்து மைதானத்தில் பிட்ச் ஆகாமலேயே நேரடியாக எல்லைக்கோட்டை கடந்து சென்ற வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கனடா சூப்பர் 60 தொடரின் அரையிறுதியில் டொராண்டோ சிக்சர்ஸ் மற்றும் மிசிசாகா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான், மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரர் கீரன் பொல்லார்டை எதிர்கொண்டு பவுன்சர் வீசினார். 22 யார்டு ஆடுகளத்தில் பிட்ச் ஆன பந்து, வழக்கத்தைவிட மிக உயரமாக எழுந்து பொல்லார்டையும் விக்கெட் கீப்பரையும் தாண்டிச் சென்றது. அதன்பிறகு மைதானத்தில் மீண்டும் விழாமல் நேரடியாக எல்லைக்கோட்டை கடந்தது. பந்து பேட்டில் படாமல் எல்லைக்கு சென்றதால், அது சிக்சராகக் கணக்கிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் விதிகளின்படி பேட்டில் படாத பந்துக்கு சிக்சர் வழங்க முடியாது. இதனால் ஒரு வைட் ரன்னுடன், பந்து எல்லைக்கோட்டை கடந்ததற்கான 4 ரன்களும் சேர்த்து மொத்தம் 5 ரன்கள் வழங்கப்பட்டன.இந்த சம்பவம் நடைபெற்ற வான்கூவரில் உள்ள பி.சி. பிளேஸ் மைதானத்தின் குறுகிய எல்லைக்கோடுகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. வழக்கமான கிரிக்கெட் மைதானங்களில் எல்லைக்கோடு ஆடுகளத்தில் இருந்து வெகுதொலைவில் அமைந்திருக்கும். ஆனால் பி.சி. பிளேஸ் அரங்கில் கால்பந்து போட்டிகளுக்காக பயன்படுத்தப்படும் மைதானத்திற்குள் செயற்கை கிரிக்கெட் ஆடுகளம் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிக்கான எல்லைக்கோடு வழக்கத்தைவிட மிகவும் அருகில் இருந்தது. இதனால் உயரமாக எழுந்த பவுன்சர் பந்து மைதானத்தில் மீண்டும் விழுவதற்குள் எல்லைக்கோட்டைத் தாண்டியது. கிரிக்கெட்டில் அரிதாகவே காணக்கூடிய இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.