இந்திய ரெயில்வே சார்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணிகளின்போது சேகரிக்கப்பட்ட பழைய இரும்பு உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் ரூ.628.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரெயில்வேயில் தூய்மையை மேம்படுத்துவதுடன், பயன்பாடின்றி கிடக்கும் பொருட்களை அகற்றும் நோக்கில் நாடு முழுவதும் சிறப்பு தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த அக்டோபர் 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரெயில்வேயின் அனைத்து மண்டலங்கள், கோட்டங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பணிமனைகள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது 1.50 லட்சத்துக்கும் அதிகமான பழைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, பொதுமக்களின் குறைதீர்ப்பு மனுக்களுக்கும் விரைந்து தீர்வு காணப்பட்டது. கடந்த அக்டோபர் 22-ந்தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள 5,884 ரெயில் நிலையங்களில் சிறப்பு தூய்மை முகாம்கள் நடைபெற்றன. அப்போது சேகரிக்கப்பட்ட பழைய இரும்பு உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் மற்றும் கழிவுகள் பின்னர் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.628.49 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தேவையற்ற பொருட்களை அகற்றியதன் வாயிலாக ரெயில்வே வளாகங்களில் 6.20 லட்சம் சதுர அடி இடம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.