சென்னை புழல் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அகில்ராம் (14), தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இருவரும் தங்களது நண்பர்களுடன் கள்ளிக்குப்பம் அருகே உள்ள புழல் ஏரிக்குச் சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, அகில்ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதைக் கண்ட மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கரையில் இருந்து கூச்சலிட்டனர். ஆனால், அதற்குள் இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இதையடுத்து, சம்பவம் குறித்து மற்ற மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் அளித்த தகவலின் பேரில் அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் ஏரியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு நீரில் மூழ்கிய அகில்ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.