பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கில், பதிவுத்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கில், பதிவுத்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கில், பதிவுத்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் உள்பட மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

பழனி கோவில் அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலம் கடந்த ஜூலை 6-ந் தேதி தனிநபர்களின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், உடுமலை அருகே பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனியைச் சேர்ந்த சேதுபதி, வக்கீல் அன்வர்தீன், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் ஆகிய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் வக்கீல் அன்வர்தீன் கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி உடல்நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் தொடர்ந்து சிறையில் உள்ளனர். பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷை மட்டும் கடந்த மாதம் 3 நாட்கள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டில் இருந்த 2 கணினிகள் மற்றும் சில ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனிடையே, இந்த நில மோசடி தொடர்பாக ஏற்கனவே பழனி மாவட்ட பதிவாளராக இருந்த சசிகலா, உதவி சார்பதிவாளர் பாலசந்தர், இளநிலை உதவியாளர் சிவசங்கரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் போலி பத்திரம் தயாரிக்க உதவியதாக கூறப்படும் பத்திர எழுத்தரும் வக்கீலுமான சிவக்குமார் (45) தலைமறைவாக இருந்தார். அவரது குடும்பத்தினரின் செல்போன் தொடர்புகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சிவக்குமார் ஒட்டன்சத்திரத்துக்கு வந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரை வீட்டிலேயே கைது செய்தனர். இதேபோல், பத்திரப்பதிவுக்கு உதவியதாக கூறப்படும் இளநிலை உதவியாளர் சிவசங்கரி (36) என்பவரையும் பழனி குபேரபட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் சிவக்குமார், சிவசங்கரி ஆகிய இருவரையும் திண்டுக்கல் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ், இருவரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புதியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நில மோசடி வழக்கில் இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.