பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளதால், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை முக்கிய வழிகளாக உள்ளன. இதனுடன் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளும் செயல்பட்டு வருகின்றன. மலைப்பாதையில் விரைவாக பயணிப்பதுடன், பழனி மலையின் இயற்கை காட்சிகளையும் ரசிக்க முடிவதால் ரோப் கார் சேவையை பக்தர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பழனி ரோப் கார் நிலையத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். அந்த வகையில், வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 64 நாட்களாக பழனி முருகன் கோவிலின் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த காலத்தில் பக்தர்கள் மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்று வந்தனர். பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக புதிய பெட்டிகள் பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.