பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி.
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி.

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு: மேலும் 2 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி.

பழனியில் தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக இரு நபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். பழனியில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான இந்த நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். பல்வேறு இடங்களில் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் திருப்பூர் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனியைச் சேர்ந்த சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் மற்றும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் மதுரை சிறையில் உள்ளனர். இவர்களின் ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஆனால், விசாரணையில் குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைக்காததால் போலீசார் அதிருப்தியடைந்தனர். இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் இருந்த கணினி மற்றும் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பத்திர எழுத்தர் சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததால் கடந்த 2 மாதங்களாக விசாரணையில் முன்னேற்றம் ஏற்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நில மோசடிக்கு பின்னால் செயல்பட்டதாகக் கருதப்படும் முக்கிய நபர் மற்றும் அவருக்கு பின்புலமாக இருந்தவர்கள் குறித்து போலீசாருக்கு இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதாகக் கருதி, இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினரின் நடவடிக்கைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்களின் செல்போன் பயன்பாடு, வாட்ஸ்அப் உரையாடல்கள், சமூக வலைதளப் பதிவுகள், வங்கி நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், வழக்கில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் சிவசங்கரி மற்றும் இடைத்தரகர் ஜெயபிரகாசுக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் வழக்கறிஞர் சிவக்குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.