பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு

பழனி மலைகளில் வரலாற்றுப் பொக்கிஷம்! 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாட்டில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப்பகுதியில் உள்ள குண்டாடி (மாச்சூர்) பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இடுகாடு அமைந்துள்ளது. இங்கு அகழாய்வு மேற்கொண்டு ஆய்வு நடத்த இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.) மும்பை சார்பில் இந்திய தொல்லியல் ஆய்வகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து நிபுணர் குழு ஆய்வு நடத்திய நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஐ.ஐ.டி. மும்பை சார்பில் 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் என மொத்தம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த ஆய்வுக்கு ‘தென்னிந்திய இடுகாடுகளின் நிலப்பரப்பு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் வாயிலாக, தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை எந்த முறையில் அடக்கம் செய்தனர், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் இறுதிச்சடங்கு நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என்பதுடன், அக்கால கலாசாரம், சமூக வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அறிய முடியும் என ஆய்வின் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் தெரிவித்துள்ளார். இவர், ஐ.ஐ.டி. மும்பையின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார். அகழாய்வுப் பணிகள் நடைபெறும் நாட்களில் ஆய்வின் தலைவர் ஸ்மிரிதி ஹரிச்சரன் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடியாக இருக்க வேண்டும் என இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் தலைவர் ஹேமசாகர் நாயக் தெரிவித்துள்ளார். மேலும், அகழாய்வின்போது கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முறையாகப் பட்டியலிட்டு, அவற்றை தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆய்வுப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு திருச்சி சரக தொல்லியல் கண்காணிப்பாளர் அவ்வப்போது நேரில் சென்று பணிகளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.