பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு : நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு : நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்

பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு : நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் அருகே சங்கரா பல்கலைக்கழக விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சக மாணவ-மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயம் எனப்படும் சங்கரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வருகின்றனர். அவர்களுக்காக பல்கலைக்கழக வளாகத்திலேயே விடுதிகளும் உள்ளன.ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த நிகிதா (19), மாணவிகள் விடுதியில் தனி அறையில் தங்கி இ.சி.இ. என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.இதையடுத்து போலீசார் விடுதிக்கு சென்று, நிகிதா தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டு சுமார் 3 நாட்கள் ஆகியிருந்ததால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.மாணவியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து அவரது அறையில் தீவிரமாக சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். அப்போது நிகிதா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.அந்த கடிதத்தில், தான் விரும்பி காதலித்த நபர் கடந்த சில நாட்களாக தன்னிடம் பேசாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக நிகிதா குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மாணவி உயிரிழந்த தகவல் பல்கலைக்கழகத்தில் பரவியதும், சக மாணவ-மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், நிகிதா எழுதி வைத்திருந்த கடிதம் தொடர்பான தகவல்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிடையில், நிகிதா கடந்த 3 நாட்களாக தனது அறையை விட்டு வெளியே வராத நிலையிலும், அவர் வகுப்புகளுக்கு வராதது குறித்தும் விடுதி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விடுதியில் பாதுகாப்பாக தங்கி கல்வி பயில்வதற்காக பெற்றோர் கட்டணம் செலுத்தி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் பல்கலைக்கழக நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகம் மீது போலீசாரும் சம்பந்தப்பட்ட உயர்கல்வித் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.