ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், படகுகளுடன் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான படகுகள், இலங்கையின் மயிலட்டி துறைமுகம், மன்னார், வவுனியா, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் சில படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கியுள்ளது. மேலும், பல படகுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன. இலங்கையில் மட்டும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200-க்கும் அதிகமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் பல படகுகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியதாவது: “மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் படகுகளை இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்காமல் அரசுடைமையாக்கி, தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து வருவது கண்டனத்திற்குரியது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து, அரசுடைமையாக்கப்பட்ட அனைத்து படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டு வந்து சம்பந்தப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.