சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு நடைபெறும் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராயபுரம் மண்டலத்தில் உள்ள 58-வது வார்டுக்கு உட்பட்ட ஜோதி வெங்கடாசலம் சாலையில், ஆபத்தான நிலையில் தாழ்வாக இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அதேபோல், அழகப்பா சாலையில் மழைநீர் வடிகாலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக, 100 ஹெச்பி திறன் கொண்ட நீர் உறிஞ்சி மோட்டார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி, உதவி ஆணையர் சத்தியநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.