சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இரு மண்டலங்களிலும் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவதுடன், தூர்வாரும் பணிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்றும் வகையில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அவர் அறிவுறுத்தினார். மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதையும், மைய சமையலறைகளில் போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார். சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு, அவற்றை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல கண்காணிப்பு அலுவலர்களான வாகே சங்கேத் பல்வந்த் (ஆலந்தூர்), செந்தில் ராஜ் (அடையாறு), மண்டல அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு சேவைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.