பரவி வரும் பன்றிக் காய்ச்சல்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பரவி வரும் பன்றிக் காய்ச்சல்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

பரவி வரும் பன்றிக் காய்ச்சல்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை முடிந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சட்டசபையில் கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. லட்சுமணன், தமிழகத்தில் பரவி வரும் எச்1என்1 (பன்றிக் காய்ச்சல்) பாதிப்பை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். குறிப்பாக முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளதா என்றும் அவர் கேட்டார்.இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளிக்கையில், எச்1என்1 புளூ காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் நான்கு மாதங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததாகவும், இந்த ஆண்டு மே முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி, தேவை ஏற்பட்டால் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கான தடுப்பூசி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், கூடுதல் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்த சிகிச்சையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு அமைச்சர் அருண்ராஜ், உயர் சிறப்பு மருத்துவர்களுக்கான பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார். இதனை சமாளிக்கும் வகையில் முதல்முறையாக 284 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவையை ஆய்வு செய்து, அதன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பின்னர் பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில், செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்காக தனிக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தாலும், அங்குள்ள அறுவை சிகிச்சை அரங்கம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்ததாக தெரிவித்தார்.இதுதொடர்பாக அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் உடனடியாக முதல்-அமைச்சரிடம் எடுத்துச் சென்றதன் காரணமாக, 10 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை அரங்கம் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கணேஷ்குமார் கூறினார். அங்கு சிசேரியன் சிகிச்சை சிறப்பாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்காக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக கணேஷ்குமார் கூறினார்.