பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது: மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என வேல்முருகன் வரவேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது: மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என வேல்முருகன் வரவேற்பு

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது: மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என வேல்முருகன் வரவேற்பு

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய போராட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தங்களது வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பகுதிகளை இழக்க மறுத்து, எந்தவித அழுத்தத்துக்கும் பணியாமல் போராடிய மக்களின் உறுதியே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், பரந்தூர் மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராட்டங்களில் பங்கேற்ற அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வேல்முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பை மீறி எந்தத் திட்டத்தையும் திணிக்க முடியாது என்பதையும், தங்களது மண்ணுக்காக மக்கள் ஒன்றிணைந்தால் அரசையும் தனது முடிவை மாற்றச் செய்ய முடியும் என்பதையும் இந்த வெற்றி எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.அதேவேளையில், விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் அரசின் பணி முடிவடையவில்லை என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு எந்தத் திட்டத்திற்கும், குறிப்பாக சிப்காட் திட்டங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளிடம் உடனடியாகவும் முழுமையாகவும் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கை எவ்வளவு விரைவாக மேற்கொள்ளப்பட்டதோ, அதே வேகத்தில் அவற்றை மக்களிடம் திருப்பி வழங்கும் பணியும் நடைபெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதற்காக தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றி, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எந்த மாற்றுத் திட்டத்திற்கும் பயன்படுத்தாமல் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.