போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

28 Jul 2026 www.thinathulir.com

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் என இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காயமடைந்த போலீசார் தரப்பிலும் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது போலீசாரின் தடியடி நடவடிக்கையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமை என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. போராட்டத்தின் போது விதிமீறல்கள் நடந்திருந்தால் அவை சட்டப்படி சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும்; போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக மட்டும் தடியடி நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். மாணவர்களுக்கு அமைதியான போராட்டத்தில் ஈடுபட முழுமையான அரசியல் சாசன உரிமை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சிறையில் இருந்தால் அவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.மராட்டியம், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்ற மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் பாதுகாப்பாக வைத்திருந்து, தேவையான நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க போதுமான முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சம்பவம் குறித்து ஆழமான, விரிவான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட்ட அவர், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.