ஆசிரியர்கள் மீது நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், அவர்களை சந்தேகத்துடன் அணுகும் போக்கையும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாகத் திறன் இல்லாத அரசு, திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீடு செய்வதில் காட்டுவதில்லை என விமர்சித்துள்ளார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றி, அதற்கேற்ப பெயர்ப் பலகைகளையும் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பெயர்ப் பலகைகளை மாற்றுவதற்கான செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெயர்ப் பலகையை மாற்றியதற்கான ஆதாரமாக, புதிய பெயர்ப் பலகையுடன் நின்று புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை சுமத்துவதையும், அவர்களை சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகுவதையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அன்பில் மகேஸ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.