கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பன்றிகளை பிடிப்பதற்காக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததில் 2-ம் வகுப்பு மாணவி ஒருவர் படுகாயமடைந்தார்.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறனின் (34) மகள் நிஷாந்தனா (7). இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில், ஜா.ஏந்தல் கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் நிலத்திற்கு நிஷாந்தனா நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது, பன்றிகளை பிடிப்பதற்காக அந்த நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எதிர்பாராதவிதமாக நிஷாந்தனா மிதித்துள்ளார். இதில் கண்ணிவெடி திடீரென வெடித்ததில், அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக வரஞ்சரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.