பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகமாகும் இ-ஹப் திட்டம்: பத்திர எழுத்தர்கள் கடும் எதிர்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகமாகும் இ-ஹப் திட்டம்: பத்திர எழுத்தர்கள் கடும் எதிர்ப்பு

பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகமாகும் இ-ஹப் திட்டம்: பத்திர எழுத்தர்கள் கடும் எதிர்ப்பு

தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக பத்திரப்பதிவுத் துறை விளங்கி வருகிறது. இந்தத் துறையின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், பத்திரப்பதிவுத் துறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இ-ஹப் திட்டத்திற்கு பத்திர எழுத்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுவாக, சொத்து தொடர்பான பத்திரங்களைப் பதிவு செய்வதற்கு முன்பு, அதன் விவரங்களை பத்திர எழுத்தர்களிடம் வழங்கி ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும். பின்னர், அந்த ஆவணங்களை சார்பதிவாளர் முன்னிலையில் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பதிவு பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பத்திரங்கள் தயாரிக்கும் பணிக்காக முறையான தேர்வில் தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றவர்கள் தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இருப்பினும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த உரிமத்திற்கான தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கிடையே, பத்திரப்பதிவுத் துறையின் 'ஸ்டார் 3.0' மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இ-ஹப் என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரே இடத்தில் அனைத்து விதமான பத்திரப்பதிவு சேவைகளையும் பொதுமக்கள் பெறும் வகையில் சிறப்பு சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களின் வாயிலாக இணையதளத்தில் விண்ணப்பித்து பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ள சொத்தாக இருந்தாலும், தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் அதிவேக வை-பை, டிஜிட்டல் டோக்கன் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்தச் சேவைக்கு ரூ.2 ஆயிரமும், தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திர எழுத்தர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் இத்திட்டத்திற்கு பத்திர எழுத்தர்கள் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பத்திரம் தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கப்பட்டால், அதிக தொகை செலுத்தி ஏலம் எடுக்கும் நிலையில் சாதாரண பத்திர எழுத்தர்கள் இருக்க மாட்டார்கள் என்றும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே இந்தப் பணியைப் பெற முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக அனுபவத்துடன் இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர். பத்திர எழுத்தர்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள், பத்திர நகல் தயாரிக்கும் அலுவலகப் பணியாளர்கள், பத்திரம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழக்கும் சூழல் உருவாகும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் அரசின் இந்த முடிவைக் கண்டித்து தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தர் மாநில சங்கத்தினர் கடந்த 6-ந்தேதி முதல் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பத்திரம் தயாரிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக விடப்பட உள்ள டெண்டரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில், பத்திரம் தயாரிக்கும் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் பொதுமக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், பத்திரம் எழுதுவதற்கான செலவும் அதிகரிக்கும். இதனால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசு இ-ஹப் திட்டம் தொடர்பான தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.