தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையில் 278 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 17 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் அருண் தயாள் சுந்தர் பிறப்பித்துள்ளார். இதன்படி, 2020-21 முதல் 2026-27-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி மாற்றம் மூலம் 2-ம் நிலை சார்பதிவாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 158 உதவியாளர்கள், தற்போது 2-ம் நிலை சார்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், ஏற்கனவே 2-ம் நிலை சார்பதிவாளர்களாக பணியாற்றி வந்த 120 பேருக்கு 1-ம் நிலை சார்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்திரப்பதிவுத்துறையில் மொத்தம் 278 பேருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதேபோல், 2-ம் நிலை சார்பதிவாளர் பதவியில் பணியாற்றிய 17 பேர் மீண்டும் உதவியாளர் பதவிக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, பத்திரப்பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின்படி 278 பேருக்கு பதவி உயர்வும், 17 பேருக்கு பதவி இறக்கமும் வழங்கப்பட்டுள்ளது.