பத்திரப்பதிவில் புதிய நடைமுறை: கட்டணமில்லா வில்லங்கச் சான்று போதுமானது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பத்திரப்பதிவில் புதிய நடைமுறை: கட்டணமில்லா வில்லங்கச் சான்று போதுமானது

பத்திரப்பதிவில் புதிய நடைமுறை: கட்டணமில்லா வில்லங்கச் சான்று போதுமானது

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவதற்காக வங்கிக் கடன் பெறுவோர் தொடர்பான சில ஆவணங்களை, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் இணையவழியில் பதிவு செய்யும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆவண ஒப்படைப்பு அடமானம் மற்றும் கடன் முழுமையாக செலுத்தப்பட்டதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அதில் ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்ப பதிவுத்துறை சில மாற்றங்களை செய்து வருகிறது. நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்யும்போது, கட்டணம் செலுத்தி பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு விதிமுறைகளை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட அம்சங்களில் புதிய நடைமுறைகளை கொண்டுவர பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை ஐ.ஜி. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: * புதிய திட்டத்தின் கீழ் வீடு, மனை விற்பனை பத்திரங்கள் மற்றும் அடமான ஆவணங்களை பதிவு செய்ய, இணையதளத்தில் கட்டணமின்றி பெறப்படும் வில்லங்கச் சான்றிதழே போதுமானது. * ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்கள் குடிமக்கள் நுழைவு வாயில் மூலம் தாக்கல் செய்யப்பட்டாலும், அவை பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும். * கடன் நிறைவுக்கான ரசீது ஆவணங்களை பதிவு செய்ய வில்லங்கச் சான்றிதழ் தேவையில்லை. * நேரில் வராமல் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. * இந்த முறையில் ஆவணதாரர் எந்த இடத்தில் இருந்தும் இணையதளம் வழியாக பதிவு செய்ய முடியும் என்பதால், ‘பிரசன்டேஷன் பவர்’ எனப்படும் சிறப்பு பொது அதிகார ஆவணங்களை பயன்படுத்த முடியாது. இதன் மூலம், நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவு நடைமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.