மதுரை மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு டெண்டர் கோரியிருப்பதற்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஏற்கனவே மதுரை மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாக, கோவில் நகரமான மதுரை தற்போது குப்பை நிறைந்த நகரமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தினமும் ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற வேண்டிய தனியார் நிறுவனம், குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக மண்ணை அள்ளிச் சென்று அதிக லாபம் ஈட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும், போராட்டங்கள் நடத்தப்பட்டும், கடந்த ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். குப்பை அகற்றும் பணியிலேயே தனியார் நிர்வாகங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், பாதாள சாக்கடை திட்டத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தால் மதுரை மாநகரம் முழுவதும் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.