போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை

போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகியுள்ளன. இதனால் அறுவடை செய்து வருமானம் பெற வேண்டிய பயிரை, தற்போது கறவை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளி, வாழக்கோம்பை, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் ஆண்டுதோறும் மானாவாரி சாகுபடியாக அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழையை நம்பி, கடந்த மாதம் வரை விவசாயிகள் அதிக பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். ஆனால், ‘எல்நினோ’ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாக கூறப்படுகிறது. இதனால் வயல்களில் போதிய ஈரப்பதம் இல்லாமல், அதிக வெப்பத்தின் காரணமாக மக்காச்சோள செடிகள் வளர்ச்சியின்றி காய்ந்து கருகின. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். பயிர்கள் கருகியதால் சில விவசாயிகள் காய்ந்த மக்காச்சோள வயல்களிலேயே கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவருகின்றனர். தம்மம்பட்டி கருமாயி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையின் போது கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி நிலத்தை உழுது மக்காச்சோளம் விதைப்போம். பின்னர் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது பயிர்கள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டும் ஒரு மாதத்திற்கு முன்பு நிலத்தை உழுது மக்காச்சோளம் விதைத்தோம். இதற்காக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால், போதிய மழை பெய்யாததால் பயிர்கள் வளராமல் காய்ந்து கருகிவிட்டன. இதனால் வேறு வழியின்றி கறவை மாடுகளை காய்ந்த மக்காச்சோள வயல்களில் கட்டி மேய்த்து வருகிறோம் என தெரிவித்தனர்.