தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராஜசூரியமடை பசும்பொன்நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனின் மனைவி மாணிக்கவேல் (35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தனது மகள் சசி (13), மகன் விஷால் (7) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் கீரைத்தோட்டத் தெருவில் தங்கியிருந்த மாணிக்கவேல், அப்பகுதியில் எம்ப்ராய்டரி வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்களுக்கு சமையல் செய்து கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை வேலை நடைபெறும் இடத்தில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற மாணிக்கவேல், கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். பின்னர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அல்டெப் நஸ்கர்ப் (31) என்பவர், கதவை உடைத்து உள்ளே சென்று மாணிக்கவேலை மீட்க முயன்றார். இதில் மாணிக்கவேல் பலத்த தீக்காயம் அடைந்ததுடன், அவரை காப்பாற்ற முயன்ற அல்டெப் நஸ்கர்ப்பும் தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணிக்கவேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயின் உடலை பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தீக்காயமடைந்த அல்டெப் நஸ்கர்ப் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.