திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட உப்பரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (40). கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரி பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியை முடித்த ராஜேஸ்வரி, சுமார் 7.30 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நபர், ராஜேஸ்வரி மீது தீ வைத்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் பலத்த தீக்காயமடைந்த ராஜேஸ்வரிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சம்பவத்துக்குப் பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், பெண் ஊழியருக்கு தீ வைத்ததாக கூறப்படும் பிரகாஷ் என்பவர் பொன்னேரி சுடுகாட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, பிரகாஷ் எஸ்.ஐ. தமிழரசனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கீழே விழுந்த பிரகாஷை போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அரிவாள் வெட்டில் காயமடைந்த எஸ்.ஐ. தமிழரசனுக்கும் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.