பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு... 120 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு... 120 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு... 120 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் என 4 கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து, அங்குள்ள தெருக்கள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன. பின்னர், கடலில் கரைப்பதற்காக சிலைகள் ஊர்வலமாக கடற்கரை பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டன. மினி லாரி, டிராக்டர், டாரஸ் லாரி உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. சிலைகளை கொண்டு வரவும் கிரேன் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், சிலைகளை எளிதாக நகர்த்துவதற்காக டிராலி வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் உதவியுடனும் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 120 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் ரசாயன வண்ணப்பூச்சுகளால் செய்யப்பட்ட சிலைகள் கடலில் எளிதில் கரையாத நிலையில், உடைந்தும் சேதமடைந்தும் கடற்கரையில் தேங்கியுள்ளன. இதனால் கரை ஒதுங்கிய சிலைகள், மரச்சட்டங்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கிரேன்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மண் மேடையையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடற்கரையில் தேங்கியுள்ள பெரிய விநாயகர் சிலைகளை மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று கரைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தூய்மைப் பணிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.