சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி, வருவாய் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சுமார் ரூ.1,200 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் 20 லட்சம் சதுரஅடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அரசாணை கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது. இதற்கு பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த திட்டத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் வரும் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்தார். பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்றும், புதிய தலைமைச் செயலக திட்டம் தற்போது ஆரம்பக்கட்டத்தில் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார். திட்டத்திற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணியும், விரிவான திட்ட அறிக்கை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த சூழலில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளருக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தலைமைச் செயலகம் அமைக்க தேர்வு செய்யப்படும் புதிய இடத்தின் விவரங்களை குறிப்பிட்டு புதிய அரசாணையை வெளியிடவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.