பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை; வருவாயை பெருக்க நடவடிக்கையும் இல்லை – எடப்பாடி பழனிசாமி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை; வருவாயை பெருக்க நடவடிக்கையும் இல்லை – எடப்பாடி பழனிசாமி

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை; வருவாயை பெருக்க நடவடிக்கையும் இல்லை – எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்றும், அந்த காலகட்டத்தில்தான் அரசின் எதிர்கால செயல்பாடுகளுக்கான பாதை வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார். புதிய அரசு தனது முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வெளியிடுவது வழக்கம் என்றும், அதன் அடிப்படையிலேயே முதலீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் முரண்பாடுகள் இருப்பதாகவும், இதனால் ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அரசின் வருவாயை அதிகரிக்கவும், வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.நிதி மேலாண்மைக்கு இந்த பட்ஜெட் சரியான பாதையை வகுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மூன்று மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் 5 ஆண்டுகளில் கடன் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார்.மேலும், இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை என விமர்சித்த அவர், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டி செயல்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், அதற்கேற்ப தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், இந்த பள்ளிகளுக்குத் தேவையான நிதியை பெற்றுத் தருவார் என நம்புவதாகவும் தெரிவித்தார். ‘பேசாமல் செயல்படுவோம்’ என்ற அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்றாலும், சில விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசிடம் பெற கடிதம் எழுதுவது மட்டும் போதாது; நேரடியாக பேசி நிதியை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக அரசுத் துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இவற்றை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.பொதுப்பணித்துறை நிறுவனங்களில் சுமார் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், மின்சாரத்துறையிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்துறையில் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதாலேயே மின்தடைகள் அதிகரிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.கொரோனா காலத்தில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக ஆட்சி செய்ததாக குறிப்பிட்ட அவர், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட அந்த ஆட்சிக் காலத்தில் கடன் சுமை குறைவாக இருந்ததாக கூறினார். மேலும், சொத்து வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.விவசாயிகள் தொடர்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். அ.தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65 ஆயிரம் விவசாயிகளுக்கு உடனடியாக பம்புசெட்கள் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.