தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் தம்பிராஜ். இவர் சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு நேற்று இரவு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கரையிலிருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் படகு வந்து கொண்டிருந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியதுடன் கடலும் கடுமையாக கொந்தளித்தது. இதில் நிலைதடுமாறிய தம்பிராஜ், எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், உடனடியாக அவரைக் கடலில் தேடத் தொடங்கினர். இருப்பினும், நீண்ட நேரம் தேடியும் தம்பிராஜைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, காணாமல் போன மீனவரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தம்பிராஜை விரைவாக மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.