ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகள் உறங்குவதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கர்ப்பிணிகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் ரெயிலில் பயணம் செய்தபோது, பகல் நேரத்தில் கீழ் படுக்கையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், பயணிகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே படுக்கையில் உறங்க வேண்டும் என ரெயில்வே வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ரெயில்வே வாரியத்தின் பொதுவான உத்தரவை ரத்து செய்ய இயலாது எனத் தெரிவித்தனர். அதேவேளையில், ரெயில்வே விதிகளில் குறிப்பிட்ட சிலருக்கு ஏற்கெனவே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்தனர். இதன்படி, கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் பகல் நேரத்திலும் எவ்வித நேரக் கட்டுப்பாடும் இன்றி படுக்கையைப் பயன்படுத்தி ஓய்வெடுக்கலாம் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ரெயில்வே அமைச்சகம் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பொதுவாகப் பயணிகள் படுக்கையை விரித்துத் தூங்க அனுமதி உண்டு. மாறாக, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான பகல் நேரத்தில் நடுப்படுக்கையை மடக்கி வைக்க வேண்டும். இதன் மூலம் கீழ் படுக்கையில் மற்ற பயணிகளும் அமர்ந்து பயணம் செய்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே ரெயில்வேயின் நடைமுறையாகும்.