தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் போக்சோ வழக்கை திறம்பட விசாரித்து, குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க முக்கிய பங்காற்றிய இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக் காவலரை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா துரிதமாக விசாரித்தார். விசாரணையின்போது தேவையான சாட்சிகள் மற்றும் ஆவண ஆதாரங்களை முறையாக சேகரித்து, அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களை முறையாக ஒருங்கிணைத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தலைமைக் காவலர் அரிராணி முக்கிய பங்களிப்பை வழங்கினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா மற்றும் தலைமைக் காவலர் அரிராணி ஆகிய இருவரையும் நேற்று திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்த டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டினார். தொடர்ந்து இருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.