நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் முதல்நிலை உறவினர்களுக்கு இலவசமாக டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கினர். அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் இணைந்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகத்திலும், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும் உதவி மையங்கள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் 2-ம் தேதி நிலவரப்படி, நேபாளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 305 பேரில் 220 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, நேபாள அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேபாள அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களில் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் தாய், தந்தை, மகன் அல்லது மகள் ஆகியோர் இந்தப் பரிசோதனையை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். டி.என்.ஏ. பரிசோதனை நடைபெறும் மையங்கள் சென்னை: 30A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004. துணை இயக்குநர், தடய அறிவியல் ஆய்வகம். மதுரை: கலெக்டர் சாலை, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம். துணை இயக்குநர், மண்டல தடய அறிவியல் ஆய்வகம். தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டி, வல்லம் மெயின் ரோடு. காணாமல் போனவர்களின் விருப்பமுள்ள முதல்நிலை உறவினர்களை, அவர்களுக்கு அருகிலுள்ள சென்னை, மதுரை அல்லது தஞ்சாவூர் மண்டலத்துக்கு அழைத்துச் சென்று இலவசமாக ரத்த மாதிரி சேகரிக்கவும், அந்த விவரங்களை நேபாள அரசு வலைதளத்தில் பதிவேற்றவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், டி.என்.ஏ. பரிசோதனை விவரங்களுடன் நேபாளத்துக்குச் செல்ல விரும்பும் உறவினர்களுக்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.மேலும் தகவல்களுக்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரியில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 18003093793 / 8069009901 / 8069009900