நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் பேரிடர் பாதிப்புகளுக்கு உதவும் வகையில், நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.காத்மாண்டுவில் நேற்று (ஆகஸ்ட் 30, 2026) நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்றார். அப்போது, இமயமலைப் பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் வகையில், இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள 5 நாடுகளை உள்ளடக்கிய ‘இமயமலை வாரியம்’ போன்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.இமயமலைப் பகுதியைச் சேர்ந்த நாடுகளின் அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடரை எதிர்கால தலைமுறைக்காகப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று சத்குரு தெரிவித்தார். இமயமலை தொடர்பான நடவடிக்கைகளில் நாடுகளுக்கு இடையே ஆலோசனையும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்றும் அவர் கூறினார்.இமயமலை மிகவும் பிரமாண்டமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இயற்கை அமைப்பு என்றாலும், அது முழுமையாக நிலையானது அல்ல என்று குறிப்பிட்ட சத்குரு, எதிர்பாராத வகையில் பெரிய பனிப்பாறையின் பெரும்பகுதி சிகரத்திலிருந்து சுமார் 4,000 அடி கீழே சரிந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்றும் அவர் கூறினார்.நேபாளம் போன்ற சிறிய நாடு தனியாக இத்தகைய மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்வது கடினம் என்பதால், இதுபோன்ற சூழல்களில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என சத்குரு தெரிவித்தார்.மேலும், பேரிடர்களுக்கு தெய்வீக காரணங்களையோ அல்லது மர்ம சக்திகளையோ காரணமாகக் கூறுவதற்கு பதிலாக, இயற்கை நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள பௌதிக விதிகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தத்துவம் அல்லது ஆன்மீக விளக்கங்களை முன்வைத்து பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை சிறுமைப்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அந்நாட்டு பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதேபோல், கோவை ஈஷா யோகா மையத்தில் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்காக ‘கால பைரவ கர்மா’ செய்யப்படும் என்றும் சத்குரு தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மனிஷா கொய்ராலா, இத்தகைய பேரழிவில் இருந்து மக்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று சத்குருவிடம் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த சத்குரு, பேரிடர் ஏற்படும் வரை காத்திருக்காமல், மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை ஒவ்வொரு கணமும் உணர்ந்து வாழ வேண்டும் என்று கூறினார். இந்த உணர்வு தொடர்ந்து இருந்தால், வாழ்க்கையை அதிக புத்திசாலித்தனத்துடன் திட்டமிட்டு வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.