நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த டேவிட்ராஜனின் மகன் சாலமன் சாம் பிரபாகர் (36). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த சாலமன் சாம் பிரபாகரை, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலையில் ஈடுபட்டவர்கள் சாலமன் சாம் பிரபாகரின் நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, குற்றவாளிகள் ஓரிடத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசாரைக் கண்டதும் லிங்கம், மகாராஜன் ஆகிய இருவரும் தப்பியோட முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் இருவருக்கும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மான் செல்வக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.