நெல்லையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: நண்பர்கள் வெறிச்செயல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நெல்லையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: நண்பர்கள் வெறிச்செயல்

நெல்லையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: நண்பர்கள் வெறிச்செயல்

நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி ஒருவர் அவரது நண்பர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த டேவிட் ராஜின் மகன் சாலமன் சாம் பிரபாகர் (34). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சாலமன் சாம் பிரபாகர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த அவரது நண்பர்கள் 2 பேர், அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சாலமன் சாம் பிரபாகரை சரமாரியாக வெட்டினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கொலை செய்யப்பட்ட சாலமன் சாம் பிரபாகரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, நெல்லை மாநகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தலைமறைவான கொலையாளிகள் எனக் கூறப்படும் 2 நண்பர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாளையங்கோட்டையில் இரவு நேரத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.