நெல்லையில் சின்ன வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் நேற்று சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கிலோ ரூ.90 மற்றும் ரூ.120 என விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், நேற்று கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.120 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. இதர காய்கறிகளின் விலையிலும் மாற்றம் காணப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்காயம், ரூ.20 உயர்ந்து ரூ.80-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.80-க்கும், தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில், கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் விலை குறைந்து ரூ.110-க்கு விற்பனையானது. மற்ற காய்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.