நெல்லை டவுன் அருகே மணிபுரம் பகுதியில் நேற்று நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 141 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தூத்துக்குடியில் 51, நெல்லையில் 47, தென்காசியில் 20, கன்னியாகுமரியில் 23 கொலைகள் நடந்துள்ளன. நெல்லையில் பதிவான கொலைகளில் 3 இரட்டைக் கொலை சம்பவங்களும் அடங்கும். இந்த நிலையில், நெல்லை டவுன் அருகே மணிபுரத்தைச் சேர்ந்த 76 வயதான டால்டன், அவரது அண்ணன் 78 வயதான நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். டால்டன் அந்த பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். அவரது வீட்டின் அருகே செந்தில் (43) குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் உள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள காலி இடத்தில் டால்டன் குடும்பத்தினர் காரை நிறுத்தி வந்ததாகவும், இதற்கு செந்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னையில் வெல்டராக பணியாற்றி வந்த செந்தில்குமார், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கும் டால்டனின் மகன் நரேனுக்கும் நேற்று காலை கோவில் அருகே கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. தகராறை பார்த்த நரேனின் பெரியப்பா நிக்கோலஸ் ராஜரத்தினம், இருவரையும் விலக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கு வந்த டால்டனையும் செந்தில்குமார் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற நரேனுக்கும் கத்திக்குத்து ஏற்பட்டது. டால்டனை தாக்கியபோது செந்தில்குமாரின் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று காயமடைந்த டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டால்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நிக்கோலஸ் ராஜரத்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே காயமடைந்த நரேன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி ரஞ்சிதா உள்ளிட்ட கணவன், மனைவி இருவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.